புதுடெல்லி: இந்தியாவில் 2022 மற்றும் 2026 க்கு இடையில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் உள்ள குறைந்தது 111 தற்போதைய எம்.பி, எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர்.
இது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 111 மக்கள் பிரதிநிதிகளில் 26 பேர் மக்களவை உறுப்பினர்கள், 7 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள், 78 பேர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்குவர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக நாகாலாந்தில் 32 பேர் (29%) கட்சி மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 20 பேர் (18%), தெலங்கானாவில் 9 பேர் கட்சி மாறியுள்ளனர்.
நாகாலாந்தின் என்டிபிபி கட்சியில் இருந்து அதிகபட்சமாக 25 பேர் (23%) வேறு கட்சிகளுக்கு மாறியுள்ளனர்.
அடுத்தபடியாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 20 பேரும் (18%), காங்கிரஸில் இருந்து 19 பேரும் (17%) கட்சி மாறியுள்ளனர்.
கட்சி மாறியவர்களில் கிட்டத்தட்ட 58% பேர் இந்த மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களே.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மக்களவை எம்பிக்களும் இதில் அடங்குவர்.
பாரத் ராஷ்டிர சமிதி (9), ஆம் ஆத்மி (7), தேசியவாத காங்கிரஸ் கட்சி (7) மற்றும் சிவசேனா (6) ஆகிய கட்சிகளில் இருந்தும் எம்.பி, எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர்.
