தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தைத் தரையிறக்கியதும் விமானி மாரடைப்பால் உயிரிழப்பு

1 mins read
21185451-3ac5-49dd-b97b-5e60ad8b7a03
இத்துயரச் சம்பவம் புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை நிகழ்ந்தது. - மாதிரிப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தாம் இயக்கிய விமானத்தைத் தரையிறக்கிய சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை நிகழ்ந்தது.

அவ்விமானியின் வயது 28 என்றும் அவருக்கு அண்மையில்தான் திருமணமானது என்றும் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அவர் அதனுள்ளேயே வாந்தி எடுத்ததாகவும் பின்னர் விமான நிலையத்திலுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் அவர் மயங்கிச் சரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவ்விமானி ஸ்ரீநகரிலிருந்து புதுடெல்லிக்கு விமானத்தை இயக்கினார். டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவரது உடல்நலம் குன்றியது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“மருத்துவக் காரணங்களுக்காக மதிப்புமிக்க சக பணியாளர் ஒருவரை இழந்ததை எண்ணி மிகவும் வாடுகிறோம். அவருடைய குடும்பத்தினருக்கு ஆன அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்,” என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்