லக்னோ: லட்சக்கணக்கில் ஊதியம் தருவதாக ஆசை காட்டி ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று தங்களை மோசடி செய்துவிட்டதாக இந்திய இளையர்கள் இருவர் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (29 வயது), அவரது நண்பர் பிரஜேஷ் யாதவ் இருவரும் கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவரும் வீடுகளுக்கு வண்ணம் பூசும் வேலை பார்த்து வந்த நிலையில், ரஷ்யாவில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை இருப்பதாக சில முகவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி இருவரும் இருவரும் ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்றதும் இருவருக்கும் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போரில் வலுகட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்.
கடும் அதிர்ச்சி அடைந்தபோதிலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், போரில் ஈடுபட்ட இருவரும் குண்டடிபட்டு எப்படியோ உயிர்பிழைத்து நாடு திரும்பி வந்தனர்.
தனியார் நிறுவனத்தில் பாதுகாவலர் வேலை இருப்பதாக முகவர்கள் கூறியதாகவும் ஆனால் 15 நாள்கள் நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சி அளிக்கப்பட்டு போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இருவரும் செய்தியாளர்களிடம் கூறினர்.
போர்க்களத்தில் சண்டையிட மறுத்தபோது தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும் வேறு வழியின்றி போரில் ஈடுபட்டபோது குண்டடிபட்டு காயங்களுக்குப் பல மாதங்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் ராகேஷ் கூறினார்.
“மூன்று முகவர்கள்தான் எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். ரஷ்யாவில் உள்ள முகவர்களைத் தொடர்புகொண்டு பேசிய பின்னர் எங்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அதில் ஏழு லட்சம் வரவு வைக்கப்பட்டதால் முகவரை நம்பி ரஷ்யா சென்றோம். பிறகுதான் ரஷ்ய ராணுவத்துக்கு நாங்கள் விற்கப்பட்டதை தெரிந்துகொண்டோம்.
“மொத்தம் ஆறு பேர் ரஷ்யாவுக்குச் சென்ற நிலையில், எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த கன்ஹையா என்பவர் குண்டடிபட்டு மாண்டுபோனார்.
“உயிருடன் ஊர் திரும்ப முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. பின்னர் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இந்திய வெளியுறவு அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த ஆண்டு நாடு திரும்பினோம்,” என்று பிரஜேஷ் தற்போது தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் மேலும் சில இந்தியர்கள் இவர்களைப்போல் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.