தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொன்மையும் கலாசாரமும் ஒளிரும் ஆக்ரா

2 mins read
fbaf2c6a-3e84-4a30-976b-c6accd3dd4e1
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால். - படம்: அனுஷா செல்வமணி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா நகரம், தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இடமாகக் கருதப்படுகிறது. மகாபாரதக் காலத்திலேயே அறியப்பட்ட இந்நகரத்தை முகலாயப் பேரரசு 1556ஆம் ஆண்டிலிருந்து 1648ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தது.

முகலாயப் பேரரசின் ஐந்தாவது பேரரசர் ஷாஜகான். அவர் செங்கோட்டை, ஷாஜகான் மசூதி, தாஜ்மகால் ஆகிய புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களைக் கட்டினார்.

ஆக்ராவின் மரபில் கல் கைவினை மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. தாஜ்மகால் போன்ற பிரம்மாண்ட தோற்றம் கொண்ட கட்டடங்களின் செதுக்கல்கள், பதிக்கும் வேலைப்பாடுகள் போன்றவை பெரும்பாலும் பளிங்குக்கல்லால் செய்யப்பட்டவை.

ஆக்ராவில் இருக்கும் பெரும்பாலான கடைகளில் தாஜ்மகால் வடிவம் கொண்ட கைவினைப் பொருள்களை அதிகம் காணலாம். வாடிக்கையாளர்கள் அவரவர் ரசனைக்கேற்றவாறு அப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் அளவில் கைவினைப் பொருள்கள் குவிந்துள்ளன.

தாஜ்மகால் 

இந்தியாவிலுள்ள தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். முழுவதும் பளிங்குக் கற்களால் ஆன அக்கட்டடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. 

காதலின் சின்னமாக உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை முகலாய மன்னன் ஷாஜகான் மறைந்த அவரின் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 வரை கட்டினார். 

அவர்களின் 14வது குழந்தை பிறந்தபோது மும்தாஜ் இறந்துவிட்டார். பெருந்துயரம் அடைந்த ஷாஜகான், தம் மனைவியின் நினைவாக அந்த ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டட வேலைகளைத் தொடங்கினார்.

தாஜ்மகால் பாரசீகக் கட்டடக்கலை மரபுகளையும் முகலாய மரபுகளையும் கொண்டுள்ளது. ஷாஜகான் குறிப்பாக வெண்ணிறப் பளிங்குக் கற்களால் தாஜ்மகாலைக் கட்டியுள்ளார்.

வளைவான வடிவம் கொண்ட நுழைவாயில், பெரிய குவிமாடம், மும்தாஜின் சமாதி, வெளிப்புற, உட்புற அழகூட்டல், பூங்கா, வெளிப்புறக் கட்டடங்கள் என கண்கவர் அம்சங்களுடன் விளங்கும் இந்த அதிசயத்தைக் காண தினந்தோறும் உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். 

ஆக்ரா செங்கோட்டை 

சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட செங்கோட்டை.
சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட செங்கோட்டை. - படம்: அனுஷா செல்வமணி

ஆக்ராவின் செங்கோட்டை முகலாயப் பேரரசர் அக்பரால் 1573ல் கட்டப்பட்டது. சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட அக்கோட்டை, ஆக்ராவில் யமுனை ஆற்றின் வலதுக் கரையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் முகலாய வம்ச கட்டடக்கலையின் மகத்துவத்தை செங்கோட்டை குறிக்கிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக ஆக்ரா செங்கோட்டை 1983ல் அங்கீகரிக்கப்பட்டது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி 

‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ திட்டத்தில் பங்குபெறும் பெண்கள்.
‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ திட்டத்தில் பங்குபெறும் பெண்கள். - படம்: அனுஷா செல்வமணி
ஆக்ராவில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள்.
ஆக்ராவில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள். - படம்: அனுஷா செல்வமணி

ஆக்ரா பல கைவினைக் கலைஞர்களை உருவாக்கும் நகரமாகவும் விளங்குகிறது. ஆக்ராவில் இருக்கும் பழங்குடிப் பொருள்களையும் கைவினைப் பொருள்களையும் வாடிக்கையாளர்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் ஆக்ராவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கைவினைக் கலைஞர்கள் அவர்களின் பொருள்களை எளிதில் விற்க இத்திட்டம் நிதியுதவி அளிப்பதுடன் அவர்களுக்கு ரயில் நிலையங்களில் கடைகளையும் அமைத்துத் தந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தில் ஏற்றம் காண வைத்துள்ள இத்திட்டம், உள்ளூர் ஊழியர்களின் வருமானத்தைப் பெருக்கவும் உதவியுள்ளது. 

மேலும், கிராமங்களில் வசிக்கும் பெண்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதற்குப் பதிலாக சமுதாய களங்கத்தை உடைத்தெறியும் வகையில் அவர்களுக்கு இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கைவினைக் கலையைக் கற்றுக்கொண்டு பல பொருள்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பெண்கள். சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற மற்றொரு முக்கிய நோக்கத்தையும் கொண்டுள்ள இத்திட்டம், நவீனத் தொழில்நுட்பம் மூலம் கைவினைப் பொருள்களைத் தயாரிக்கும் உத்திகளைப் பெண்களுக்குக் கற்றுத்தந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்