யுரேனியம் விநியோகம் தொடர்பாக இந்தியா, கனடா இடையே ஒப்பந்தம்

யுரேனியம் விநியோகம் தொடர்பாக இந்தியா, கனடா இடையே ஒப்பந்தம்

2 mins read
8e2cb87b-902b-4369-8a87-3811abd680c3
டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: யுரேனியம் விநியோகம் தொடர்பான முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் கனடாவும் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிற்குத் தேவைப்படும் யுரேனியத்தை இனி கனடா வழங்கும்.

குறிப்பாக, வரும் 2027 முதல் 2035 வரை இந்தியாவிற்கு 22 மில்லியன் பவுண்டு யுரேனியத்தை வழங்க கனடா முன்வந்துள்ளது. இதன் மதிப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்த மைல்கல் ஒப்பந்தம் வரலாற்றுப்பூர்வமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த இரு தலைவர்களும் இருதரப்புக்கும் இடையேயான ஆண்டு வர்த்தகத்தின் மதிப்பை 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது குறித்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

சிவில் அணுசக்தித் துறையில் நீண்டகால யுரேனிய விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக திரு கார்னி தெரிவித்தார்.

சிறிய உலைகள் மற்றும் மேம்பட்ட உலைகள் ஆகியவற்றிலும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றார் அவர்.

இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய கனடா தயாராக இருப்பதாகவும் இரு நாடுகளும் ஓர் உத்திபூர்வ எரிசக்தி பங்காளித்துவத்தைத் தொடங்க உள்ளதாகவும் திரு கார்னி கூறினார். உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் பாராட்டினார்.

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இருவரும் விவாதித்ததாகவும் பயங்கரவாதம் என்பது மொத்த மனிதகுலத்துக்கும் சவாலாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து இரு நாடுகளும் கலந்து ஆலோசித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய ஆலோசனைகள் உலகளாவிய அமைதி, நிலைத்தன்மைக்கு மிக முக்கியமானது என்றார் திரு மோடி.

தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இயற்கையான பங்காளிகள் என்று வர்ணித்த திரு மோடி, செயற்கை நுண்ணறிவு, ‘சூப்பர் கம்ப்யூட்டிங்’, பகுதி மின்கடத்தி ஆகிய துறைகளில் இருதரப்பும் மேம்பாடு காண ஒத்துழைக்கும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சநிலை மாநாட்டைக் கூட்டாக நடத்த முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் கார்னி, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார். இது ஒரு லட்சிய ஒப்பந்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
கனடாஒப்பந்தம்விநியோகம்