அகமதாபாத் குண்டுவெடிப்பு: 38 பேரின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

அகமதாபாத் குண்டுவெடிப்பு: 38 பேரின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

படம்: அகமதாபாத் மிரர்

07 Jul 2026 - 4:18 pm

1 mins read

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், 38 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் அம்மாநில உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) உறுதிசெய்தது.

இந்தத் தண்டனைகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஏ.ஒய். கோக்ஜே, சமீர் தவே அடங்கிய அமர்வு அந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த 2008 ஜூலை 26ஆம் தேதி அகமதாபாத் நகரை உலுக்கிய தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ‘இந்தியன் முஜாகிதீன்’ பயங்கரவாத அமைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்த நிலையில், அவர்களுக்கான தண்டனையை உயர் நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

வெறும் 70 நிமிட இடைவெளியில் 21 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்துவந்த சில மருத்துவமனைகளும் குறிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2022 பிப்ரவரியில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை ‘அரிதினும் அரிதான’ ஒன்றாகக் கருதி, குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்தியாவின் மிக மோசமான பயங்கரவாத வழக்குகளில் ஒன்றான இதில், சிறப்பு நீதிமன்றம் உறுதிப்படுத்திய குற்றச்சாட்டுகளையும் விதித்த தண்டனைகளையும் உயர் நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
அகமதாபாத்குண்டுவெடிப்புஉயர் நீதிமன்றம்மரண தண்டனை