அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) ரத்துசெய்யப்பட்டது.
இதே பயணப் பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஒருவரைத் தவிர்த்து விமானத்தில் இருந்த 242 பேரும் விமானம் மோதிய கட்டடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் சிலரும் உயிரிழந்தனர்.
விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டதற்கு ‘விமானங்கள் கிடைக்கப்பெறுவதில் சிரமம்’ ஏற்பட்டதே காரணம் என்று தகவலறிந்த தரப்புகள் குறிப்பிட்டன.
அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா ஏஐ-159 விமானச் சேவை திடீரென ரத்துசெய்யப்பட்டதாக பயணிகள் கூறினர்.
“பிற்பகல் 1 மணிக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் லண்டனின் கேட்விக் நகருக்கு நான் செல்லவிருந்தேன். ஆனால், விமானம் ரத்துசெய்யப்பட்டதாக இப்போதுதான் நான் அறிந்தேன். விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டதற்கான காரணத்தையோ பயணச்சீட்டுக் கட்டணத்தைத் திரும்பத் தருவதற்கான விவரங்களையோ விமானப் பணியாளர்களால் வழங்க முடியவில்லை,” என்றார் விமானப் பயணி ஒருவர்.
ஏர் இந்தியா விளக்கம்
இந்நிலையில், விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டதற்கான காரணத்தை ஏர் இந்தியா தெளிவுபடுத்தியது. இதுகுறித்து அறிக்கையை வெளியிட்ட அந்நிறுவனம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்துசெய்யப்பட்டதாக பரவிய வதந்திகளை மறுத்துள்ளது.
“வான்வெளிக் கட்டுப்பாடுகள், கூடுதல் முன்னெச்சரிக்கை சோதனை போன்ற காரணங்களால் விமானம் கிடைக்கப்பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அகமதாபாத்-லண்டன் ஏஐ-159 விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டது,” என்று ஏர் இந்தியா விளக்கமளித்தது.
“எமது பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு அவர்களைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். பயணிகள் ஹோட்டலில் தங்குவதற்கான வசதியையும் அவர்கள் விரும்பினால் பயணச்சீட்டுக் கட்டணத்தை திரும்பத் தர அல்லது வேறொரு தேதியில் அவர்கள் பயணம் செய்வதற்கான ஏற்பாட்டையும் நாங்கள் செய்து தருகிறோம்,” என்றும் ஏர் இந்தியா விவரித்தது.
தொடர்புடைய செய்திகள்
லண்டனின் கேட்விக்கிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானமும் (ஏஐ170) ரத்துசெய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.