பெங்களூரு: இந்தியாவில் முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பன்மொழிச் சேவைகளை பெங்களூரு காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
‘நம்ம 112’ என்ற திட்டத்தின்கீழ் பன்மொழிச் சேவைகள் வழங்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறினார்.
“பெங்களூரு நகரம் அனைத்துலக அளவில் புகழ்பெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவர்கள் இங்கு வாழ்கிறார்கள். ஒருசில நேரங்களில் அவசரத் தேவைகளுக்குக் காவல்துறையைப் பொதுமக்கள் தொடா்புகொள்ளும்போது மொழி பெருந்தடையாக இருந்துவிடுகிறது.
“இதனால், உடனடித் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், காவல்துறை வழங்கும் 112 அவசரச் சேவைகளைப் பன்மொழிச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஒன்றிணைத்திருக்கிறோம்,” என்று அமைச்சர் ஜி.பரமேஸ்வர் கூறினார்.
“பல்வேறு மொழிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை மெய்நிகர் நேரத்தில் கன்னடம் உள்ளிட்ட விரும்பிய மொழியில் காவல்துறையினரால் புரிந்துகொண்டு, உடனடியாக உதவி செய்ய முடியும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பெங்களூரில் வசிக்கும் மாணவா்கள், தொழில்முனைவோா், அதிகாரிகள், பணியாளர்கள், சுற்றுப்பயணிகளுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.
“நம்ம 112 என்ற இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த புதிய முயற்சி, பத்துக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளை ஆதரிப்பதன்மூலம் மொழித் தடைகளை நீக்குகிறது,” என்று காவல்துறை தெரிவித்தது.
திட்டத்தின் முதற்கட்டமாக வங்காளம், மலையாளம், குஜராத்தி, ஒரியா, மணிப்பூரி, அசாமி, காஷ்மீரி, நேப்பாளி ஆகிய இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் ஸ்பானியம், பிரெஞ்சு, அரபி மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
காவல்துறையில் பெரும்பாலோர் ஏற்கெனவே கன்னடம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் தெரிந்தவர்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
எந்த மொழியைப் பின்புலமாகக் கொண்டவா்களாக இருந்தாலும், பொதுமக்களின் அவசரத் தேவைகளை அறிந்து சேவையாற்ற வேண்டும் என்பதே காவல்துறையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

