ஏஐ மாநாடு எதிரொலி: வானளவு உயர்ந்த நட்சத்திர தங்குவிடுதி அறை வாடகை

ஏஐ மாநாடு எதிரொலி: வானளவு உயர்ந்த நட்சத்திர தங்குவிடுதி அறை வாடகை

சித்திரிப்புப் படம்: 5starhotelsindelhi.com

10 Feb 2026 - 7:44 pm

1 mins read

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப (ஏஐ) மாநாடு நடைபெறுவதையொட்டி டெல்லியில் நட்சத்திரத் தங்குவிடுதிகளின் அறை வாடகை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அறை வாடகை குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.30 லட்சத்தை எட்டிவிட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 19ஆம் தேதி டெல்லியில் மாநாடு நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து அரச தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

எனினும், மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்குவதற்கு தங்குவிடுதிகளில் போதுமான அறைகள் இல்லை. அதனால் பல தங்குவிடுதிகள் மளமளவென அறைக் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

ஜனவரி 10ஆம் தேதி நிலவரப்படி, அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும் மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் அசரவில்லை. அனைத்துவிதமான அறைகளையும் அவர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

வழக்கமாக ரூ.115,000 கட்டணம் பெறும் தங்குவிடுதியில், அறை வாடகை ரூ.14.5 லட்சமாக அதிகரித்துவிட்டது.

மற்றொரு தங்குவிடுதியில், நட்சத்திர அறைக்கு ஓர் இரவுக்கு ரூ.30 லட்சம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் வழக்கமான கட்டணம் ரூ.237,500 ஆகும்.

சில தங்குவிடுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு இரவுகள் தங்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
டெல்லிஏஐசெயற்கை நுண்ணறிவுமாநாடுதங்குவிடுதிகட்டணம்