தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதியில் ‘ஏஐ’ கட்டுப்பாட்டு அறை திறப்பு

1 mins read
b9c3899d-5509-4d2d-bf1f-f2de61b609c2
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.  - கோப்புப்படம்: ஊடகம்

திருப்பதி: நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (ஏஐ) அடிப்படையில் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை (செப்டம்பர் 25) திறந்து வைத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். பண்டிகைகள், விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பது வழக்கம்.

பக்தர்களுக்கான வழிபாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆந்திர அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது ‘ஏஐ’ மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் உதவியோடு, பக்தர்கள் கூட்டத்தால் கோவிலில் ஏற்படக்கூடிய நெரிசலை முன்கூட்டியே கணிக்க இயலும். பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகளை மிக வேகமாக அதிகாரிகளால் மாற்றி அமைக்க முடியும்.

“திருப்பதி திருமலையில் 6,000க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் மூலம் நிமிடந்தோறும் ஏறக்குறைய 3.6 லட்சம் தரவுகளைப் பெறமுடியும்,” என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த ‘ஏஐ’ மையத்துடன் நவீன கேமராக்கள், நேரடி மின்னிலக்கத் தகவல் துறை முப்பரிமாண வரைபடங்கள் ஆகியவை இணைக்கப்பட்டுத் தொழில்நுட்பக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்