புதுடெல்லி: புதுடெல்லி: 2026- 27ஆம் கல்வியாண்டு முதல், 3ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிப் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பல்வேறு கல்விசார் நிபுணர் அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையின் செயலாளர் சஞ்சய் குமார், இன்றைய சூழலில் ‘ஏஐ’ குறித்து இளையர்கள் அறிந்திருப்பது மிக அவசியம் என்றார்.
செயற்கை நுண்ணறிவுக் கல்வி என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் இணைக்கப்பட்ட ஓர் அடிப்படை உலகளாவிய திறமையாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து பேசாதவர்கள் இல்லை. ‘ஏஐ’ அதிகரித்து வரும் நிலையில், மனித வாழ்க்கையில் பெரும் புரட்சி ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
அதேசமயம், லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் ஆபத்தையும் ஒருதரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள். மனிதர்கள் செய்யும் வேலைகளை ‘ஏஐ’ தொழில்நுட்பம் செய்துவிடுவதால் பலர் வேலை இழக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான உலக நாடுகள் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவில் 3ஆம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ‘ஏஐ’ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சிக்கலான சவால்களைத் தீர்க்க ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை நெறிமுறை ரீதியாகப் பயன்படுத்துவதில் இந்த முயற்சி ஓர் ஆரம்பகட்டம் என்றும் ஆனால் இந்த முதல் அடியை எடுத்து வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கல்வி அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் எதிர்கால இளம் தலைமுறையை தொழில்நுட்பம் சார்ந்த பொருளியலுக்குத் தயார்படுத்தும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் ஏஐ தொடர்பான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
“இந்தத் தொழில்நுட்பம் குறித்து மூன்றாம் வகுப்பு முதல், அடிப்படை நிலையில் இருந்தே மாணவர்கள் மனதில் இயல்பாகவே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“செயற்கை நுண்ணறிவு, கணக்கீட்டு சிந்தனை ஆகியவை கற்றல், கற்பித்தல் என்ற கருத்தை வலுப்படுத்தும். பொது நன்மைக்காக ‘ஏஐ’ என்ற கருத்தை நோக்கிப் படிப்படியாக விரிவடையும்,” என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
செயற்கை நுண்ணறிவு, கணக்கீட்டு சிந்தனை பாடத்திட்டத்தை உருவாக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி பாடம் நடத்த, ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மின்னிலக்க பொருளியலுக்கு ஏற்ப கற்பவர்களையும் கல்வியாளர்களையும் தயார்படுத்துவதே அத்திட்டத்தின் நோக்கம்.
தற்போது, நாடு முழுவதும் 18,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் ஏஐ ஒரு திறன் பாடமாக கற்பிக்கப்படுகிறது. அதேபோல, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ ஒரு விருப்பப் பாடமாக உள்ளது.

