தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு

2 mins read
cce9474d-d384-45ca-b2b4-8e75833fd2a2
படம்: - truevalueinfosoft.com / இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்க ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு இயங்கும் முக அடையாள முறைகள் பொருத்தப்படும் என்று அந்நாட்டு மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய பிரமாண வாக்குமூலத்தில் அரசாங்கம் இதனைத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம் தொடுத்த பொது நலன் வழக்கிற்கு இந்திய உள்துறை அமைச்சு பதிலளித்தது.

செயற்கை நுண்ணறிவு முக அடையாள கேமராக்கள் பொருத்தப்படவுள்ள ரயில் நிலையங்களில் மும்பை, டெல்லி நிலையங்கள் அடங்கும் என்று பிரமாண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் குற்றங்கள் புரிவோருக்கான தேசிய தரவுப் பதிவில் (என்டிஎஸ்ஓ) ஆக அண்மைய குற்றவாளிகளின் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சு, நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்க ரயில் நிலையங்களில் முக அடையாள கேமராக்களைப் பொருத்துவதோடு காவல்துறையினரும் உள்ளாட்சி அமைப்புகளும் எட்டு நகரங்களில் பாதுகாப்பு நகரத் திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதாக உள்துறை அமைச்சு சொன்னது. டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத், லக்னோ ஆகியவை அந்நகரங்களாகும்.

பாலியல் பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம், பின்தொடர்தல், சிறார் துன்புறுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், விரல் ரேகை ஆகிய தகவல்கள் என்டிஎஸ்ஓவில் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

அந்தத் தரவுத் தொகுப்பில் தற்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக, 2,028,000 பதிவுகள் இருப்பதாக அமைச்சு கூறியது.

நாட்டில் உள்ள எல்லா காவல் நிலையங்களும் சட்ட அமலாக்க அமைப்புகளும் அத்தரவுத் தொகுப்பை, ஒன்றிணைக்கப்பட்ட குற்றவியல் நீதி முறையின் (ஐசிஜேஎஸ்) மூலம் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்