பிரயாக்ராஜ்: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வடக்கு நகரமான பிரயாக்ராஜ், திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை, யமுனை, கண்களுக்குப் புலப்படாத சரசுவதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதாகக் கருதப்படுகிறது.
மூன்று புனித நதிகளின் சங்கமத்தில் மக்கள் புனித நீராடுவர். ஆறு வாரங்கள் நடக்கும் இந்த அரிய நிகழ்வை மக்கள் மகா கும்பமேளாவாகக் கொண்டாடுகின்றனர்.
இவ்வாண்டு, ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாள்கள் நடக்கும் இத்திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிகமாக கூடும் இந்த இந்து சமய நிகழ்வில் கூட்ட நெரிசலால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.
“அனைவரும் தங்கள் சமயக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கும்பமேளாவின் தொழில்நுட்ப பிரிவின் மூத்த காவல்துறை அதிகாரி அமித் குமார் ஏஎப்பியிடம் கூறினார்.
“மக்கள் அதிகம் கூடுவர் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் மக்கள் கூட்டமாகச் செல்வதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எங்களுக்கு உதவுகிறது,” என்றார் அவர்.
1954ல் நடந்த கும்பமேளா திருவிழாவில், கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கூட்ட நெரிசலில் சிக்கியும் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர்.
2013ஆம் ஆண்டு நடந்த இத்திருவிழாவில் கூட்டத்தில் சிக்கி கிட்டத்தட்ட 36 பேர் மாண்டனர். ஆனால், இம்முறை உயிரிழப்பைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டத்தின் அளவைத் துல்லியமாக சேகரிப்பதின் மூலம் அந்த இடங்களில் ஏற்படும் எனச் சந்தேகிக்கப்படும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தயாராக முடியும். இதற்கு தொழில்நுட்பம் பெரிதும் உதவுவதாக அதிகாரிகள் கூறினர்.
விழா நடைபெறும் இடங்களிலும் சாலைகளிலும் கிட்டத்தட்ட 300 கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுவதாகவும் காவல்துறை கூறியது.