அமராவதி: இந்தியாவின் முன்னணி மாநிலங்களுக்கு இணையாக ஆந்திர மாநிலத்தை உருவாக்கப் போவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வசூலை மேம்படுத்த தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் (ஏஐ) பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. அங்குச் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 9), நடப்பு 2026-27 நிதியாண்டிற்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்குகள், முக்கியச் செயல்திறன் குறிகாட்டிகளை அவர் ஆய்வுசெய்தார்.
மேலும், பொருளியல் நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, தரவு சார்ந்த நிர்வாகத்திற்கு ஆதரவளிப்பதற்காக, செயற்கை நுண்ணறிவுமூலம் இயங்கும் ஒரு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் திரு நாயுடு வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்கவும் மாநிலத்தின் நிதிநிலையை வலுப்படுத்தவும் வருவாய் நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஏஐ போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் திரு நாயுடு எடுத்துரைத்தார்.
மாநிலத்தின் பொருளியல் செயல்பாட்டை மதிப்பிடுவது அவசியம் எனக் கூறிய திரு நாயுடு, மாதாந்தரப் பொருளியல் அறிக்கைகளைத் தயாரிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
மாதாந்தர, காலாண்டு, அரையாண்டு புள்ளிவிவரக் குறிகாட்டிகளின் ஆதரவுடன், மாநில, மாவட்ட மற்றும் மண்டல அளவுகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை மிகவும் திறம்படக் கண்காணிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய சராசரிக்கும் குறைவாக உள்ள செயல்திறன் குறிகாட்டிகளை மேம்படுத்தி, அவற்றை முன்னணி மாநிலங்களுக்கு இணையாகக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் திரு நாயுடு வலியுறுத்தினார்.

