கோல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.
மேற்கு வங்கத்தில் நடைபெறும் இப்பணியில் இரட்டைப் பதிவுகள், போலிப் பதிவுகளைக் களைய ஏஐ பயன்படும் என ஆணையம் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது 60 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி, இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அடுத்து தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பலனாக, ஒரே நபர் பல இடங்களில் தன் பெயரைப் பதிவு செய்திருந்தால் அது கண்டுபிடிக்கப்படும். அதேபோல் ஒரே புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலியான பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றையும் ஏஐ மூலம் கண்டுபிடித்து களைந்துவிடலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.
குறிப்பாக, புலம்பெயர்த் தொழிலாளர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, போலி வாக்காளர்கள் சேர்க்கப்படும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஏராளமானோர் இரட்டைப் பதிவுகளைச் செசய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, ஏஐ தொழில்நுட்பம் இத்தகைய தவறுகளை, முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“எனினும், வாக்குச்சாவடி நைல அலுவலர்கள் உறுதிசெய்த பின்னரே ஏஐ மூலம் கண்டறியப்பட்ட வாக்காளர் பதிவுகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். எனவே, உதவிக்காக மட்டுமே ஏஐ பயன்படுத்தப்படுகிறது,” என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.`

