திருமண விருந்தில் எதைச் சாப்பிடலாம் என அறிவுரை கூறும் ‘ஏஐ’ கருவி

திருமண விருந்தில் எதைச் சாப்பிடலாம் என அறிவுரை கூறும் ‘ஏஐ’ கருவி

2 mins read
03499aaa-f82f-4e89-88f6-267fdf0c44be
திருமண விருந்தின்போது அங்கு வரிசையாக வைக்கப்பட்டுள்ள‌ உணவுகளை இந்தக் கருவி முதலில் படம் பிடித்து விடுகிறது. - படம்: மாலை மலர்

பெங்களூரு: உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் (ஏஐ) பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் திருமண விருந்து நிகழ்வுகளை திட்டமிடவும் இது பயன்படுகிறது.

நீரிழிவு நோய், கல்லீரல், இருதய நோய் உள்ளவர்கள் திருமண விருந்துகளில் பலவகையான உணவுகள் பரிமாறப்பட்டாலும் அவற்றில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதை முடிவு செய்ய முடியாமல் தவிப்பதுண்டு.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் பங்கஜ் என்பவர், ‘பஃபே’ஜிபிடி (BuffetGPT) என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கியுள்ளார்.

இந்தக் கருவி மூலம் என்ன உணவு வகைகளை சாப்பிடலாம் என்று எளிதில் தீர்மானித்துவிட முடியும் என்கிறார் பங்கஜ்.

திருமண விருந்தின்போது அங்கு வரிசையாக வைக்கப்பட்டுள்ள‌ உணவுகளை இந்தக் கருவி முதலில் படம் பிடித்து விடுகிறது.

பிறகு, அன்றாடம் நாம் சாப்பிடும் உணவின் அளவை கணக்கில் கொண்டு நமக்குள்ள நோய்களின் தன்மைக்கேற்ப என்னென்ன உணவு வகை சாப்பிடலாம் என இந்த ‘ஏஐ’ கருவி பரிந்துரைக்கும்.

இதன் மூலம் உடலுக்கும் வயிற்றுக்கும் எந்தவிதத் தொல்லையும் தராமல் அதிகமான உணவு வகைகளை ருசிக்க முடியும் என்று பங்கஜ் கூறுகிறார்.

பல திருமண நிகழ்வுகளில் எந்த உணவையும் ருசிக்க முடியாமல் தன்னைப் போலவே பரிதவிக்கும் பலரை பார்த்த பிறகுதான் ‘பஃபே’ஜிபிடி (BuffetGPT) கருவியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டதாம்.

இந்தக் கருவியை முதலில் தனது நண்பரின் திருமணத்தின்போது சோதனை செய்து பார்த்தபோது நல்ல பலன் கிட்டியது என்றாலும், ஒருசிலரது கிண்டல்களை எதிர் கொண்டதாகவும் சொல்கிறார்.

தற்போது சமையல் கலைஞர்கள், திருமண நிகழ்வுக்கான ஏற்பாட்டாளர்கள், உணவுப் பிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினருடன் கருத்துக்கள் கேட்டு தனது ஏஐ கருவியில் சில மாற்றங்களைச் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்