புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில் நம்பிக்கையும் பாதுகாப்பும் அவசியம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவைச் (ஏஐ) செயல்படுத்துவதில் சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
மின்னிலக்க குடிமக்களைப் பாதுகாக்க பயனுள்ள பாதுகாப்புகள் இருப்பதை உறுதி செய்வதும் மிக அவசியம் என திரு ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
“எதிர்வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பொருளியல் மாற்றம், வேலை பழக்கங்கள் மாற்றம், புதிய சுகாதார தீர்வுகளை உருவாக்குதல், கல்வி அணுகலை மேம்படுத்துதல் எனப் பல மாற்றங்களுக்கு வித்திடும்.
“வாழ்க்கை முறையில் ‘ஏஐ’ சேர்க்கப்படுவது உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“மனிதகுல வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், அதன் பாதை எப்போதும் நேரானதாக இருப்பதில்லை.
“வாக்குறுதிகளும் மீறல்களும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. அதிகாரமளித்தல் மற்றும் சுரண்டல், ஜனநாயகமாக்கல் மற்றும் ஆதிக்கம், கூட்டாண்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை பயன்பாடுதான் தீர்மானிக்கிறது,” என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்பது நம்பிக்கை, பாதுகாப்பு, நியாயம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.