சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்ட நிலையில், இந்தப் போரை முடித்து வைக்கும் நோக்கத்தில் அதிமுக களமிறங்கி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணி தரப்புக்கு பாமகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கே அதிகாரம் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் 35 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவைச் சீட்டும் என பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கட்சியைத் தொடங்கிய நான்தான் தலைவர், எனது கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கிறது என ராமதாஸ் கூறி வரும் நிலையில் அவர் திமுகவுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் சொல்லப்படுகிறது.
இந்த தந்தை-மகன் பிளவை முடித்து வைத்து, பாமகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி. சண்முகம் (வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், ராமதாசுடன் நெருக்கமானவர்) தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்துப் பேசினார்.
கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவே சண்முகம் சென்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும், தந்தை-மகன் இருவரும் விரைவில் ஒன்றிணைய வேண்டும், அதுதான் கட்சிக்கும் சமுதாயத்துக்கும் நல்லது என சண்முகம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.