ஜார்க்கண்டில் அவசர மருத்துவ உதவி விமான விபத்து; எழுவர் உயிரிழப்பு

ஜார்க்கண்டில் அவசர மருத்துவ உதவி விமான விபத்து; எழுவர் உயிரிழப்பு

2 mins read
cd58513b-1c9d-4ba3-b0d4-6834f2ec9baf
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.  - படம்: என்டிடிவி

ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த அவசர மருத்துவ உதவி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும், தற்போது மீட்புப் பணிகளின் இறுதியில், விமானத்தில் இருந்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (பிப்ரவரி 23) மாலை ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த விபத்தில், விமானத்தில் இருந்த நோயாளி ஒருவர், மருத்துவர்கள், உதவியாளர்கள், விமானிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த நோயாளி, சஞ்சய் குமார், 41, என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

‘ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம், ராஞ்சியிலிருந்து இரவு 7.11 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணியளவில் டெல்லியில் தரையிறங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

விபத்து நேர்ந்த இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், அங்குச் சென்றடைவதற்கு மீட்புப் படையினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அனைத்துச் சடலங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சர் சம்பய் சொரன், இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்