புதுடெல்லி: இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடிப்பது எளிதான செயல் அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெடிகுண்டு புரளிகளால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 90க்கும் மேற்பட்ட விமானங்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. தாமதம், விமானங்களைத் திருப்பி விடுதல் போன்றவற்றால் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளைச் சந்தித்தன.
அந்தச் சம்பவங்கள் மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகளுக்கு மிகவும் சவாலானதாக அமைந்தன.
மிரட்டல் எந்த இணைய முகவரியில் (IP address) இருந்து விடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய இயலவில்லை என்று உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியதாக ‘நியூஸ் 18’ தெரிவித்தது.
மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட எல்லாச் சம்பவங்களிலும் ஒரே ஆள் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை என மின்னிலக்கப் புலன்விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உதாரணத்திற்கு, உதய்ப்பூர்-மும்பை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மெல்லிழைத்தாளில் (டிஷ்யூ பேப்பர்) எழுதப்பட்டு இருந்தது.
மற்ற சம்பவங்களில் மின்னிலக்க வடிவில், சமூக ஊடகங்களிலும் மின்னஞ்சல் மூலமாகவும் மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
“முன்னர், மின்னிலக்க மிரட்டல்களை அனுப்ப விபிஎன் (VPN) பயன்படுத்தினார்கள். இணைய முகவரியைச் சோதித்தபோது ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
“இருப்பினும் விபிஎன் சங்கிலித் தொடரை சந்தேக நபர்கள் பயன்படுத்தினர். மின்னிலக்க மிரட்டல்களை அனுப்பியவர் தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கக்கூடும்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிரட்டல் விடுப்போருக்குத் தடை
இதற்கிடையே, விமானங்களில் மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு விதிகளைத் திருத்துவது பற்றி பரிசீலிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு திங்கட்கிழமை (அக்டோபர் 21) தெரிவித்தார்.
மிரட்டல் விடுக்கும் நபர்கள் விமானத்தில் பயணம் செய்ய இயலாத வகையில் நிரந்தரமாக அவர்களைத் தடை செய்யும் வகையில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளைத் திருத்துவது பற்றியும் யோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடர்பில் உள்துறை அமைச்சுடன் இணைந்து விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு (BCAS) செயல்பட்டு வருவதாகவும் திரு நாயுடு தெரிவித்தார்.
இன்றும் மிரட்டல்
இந்நிலையில், இன்றும் (அக்டோபர் 21) வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையில், சந்தேகப்படும் வகையில் எந்தப் பொருளும் சிக்கவில்லை. அதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.