தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.3.45 கோடி மதிப்புள்ள 30 தங்கக் கட்டிகளுடன் விமானப் பயணி கைது

1 mins read
உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியர்களும் சிக்கினர்
f10c4005-df7a-4cc8-bf61-61dc54306c7c
மூன்று பொட்டலங்களில் மறைத்துவைத்து தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஹைதராபாத்: துபாயிலிருந்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணியிடமிருந்து 3.5 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து மஸ்கட் வழியாக வியாழக்கிழமை (மே 1) ஹைதராபாத் சென்ற அந்த இந்தியப் பயணி தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

விமானத்திலிருந்து இறங்கிய அப்பயணி தாம் கொண்டுவந்த தங்கக் கட்டிகளை விமான நிலைய ஊழியர் ஒருவரிடம் கைமாற்றிவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவை பின்னர் விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்த இன்னோர் ஊழியரிடம் வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்கத்தைப் பெற்றுக்கொண்டபின் அந்த இரண்டாவது ஊழியர், விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தபிறகு மீண்டும் அந்தப் பயணியிடம் அதனை ஒப்படைக்கவிருந்ததும் முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்தது.

மூன்று பொட்டலங்களில் இருந்த 30 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 99.9% தூய்மையுடன் கூடிய அந்த மூன்றரை கிலோ தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.3.45 கோடி (S$535,000) என அதிகாரிகள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து, அந்த விமானப் பயணியும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு ஊழியர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் பல மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறை. முன்னதாக, கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் துபாயிலிருந்து வந்த பயணியிடமிருந்து 1.39 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்