அகமதாபாத்: ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் மாண்டோர் எண்ணிக்கை 279ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களில் விமானத்தில் இருந்த 241 பேரும் அது மோதிய பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 38 பேரும் அடங்குவர். அந்த 38 பேரில் மருத்துவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள், மேகானி நகர் வட்டாரவாசிகள் உள்ளிட்டோர் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த போயிங் 787-டிரீம்லைனர் விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டும் உயிர்தப்பினார்.
மருத்துவ மாணவர்களுக்கான உணவுக்கூடத்தின் கூரைப்பகுதியில் விமானத்தின் கறுப்புப் பெட்டி விழுந்து கிடந்தது என்று காவல்துறை இணை ஆணையர் நீரஜ் பத்குஜார் தெரிவித்தார்.
விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி வளாகத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தன.
“மரபணுச் சோதனை மூலம் மாண்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உடற்பாகங்கள், முழு உடல் என மொத்தம் 319 உடற்பகுதிகளைச் சேகரித்து அனுப்பியுள்ளோம்,” என்று குஜராத் மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமானத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட அவ்விமானம், சற்று நேரத்திலேயே தரையில் விழுந்து தீப்பிடித்தது.
அவ்விபத்தில் மாண்டவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ருபானியும் ஒருவர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மருத்துவக் கல்லூரி வளாகக் குடியிருப்பில் தங்கியிருந்த பத்து மருத்துவர்களும் அவர்களின் உறவினர்கள் சிலரும் மாண்டுவிட்டதாக அரசாங்க வட்டாரங்களைச் சுட்டி, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மாணவர்கள் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஏர் இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் விமான விபத்து தொடர்பில் அந்நிறுவனத்திற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.