புதுடெல்லி: விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வானில் பறப்பதற்கான தகுதிச் சான்று இல்லாமல் எட்டு முறை விமானத்தை இயக்கியதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, பாதுகாப்பு, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் விமானங்களுக்கு ‘ஏஆர்சி’ என அழைக்கப்படும் தகுதிச் சான்றிதழை விமான ஒழுங்குமுறை ஆணையம் வழங்குகிறது.
அந்தச் சான்றிதழ் பெற்ற விமானங்களே வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தகுதிச் சான்றிதழ் இன்றி புதுடெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குப் பறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விதிமீறலைக் கண்டிக்கும் விதமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இந்தத் தவற்றுக்கு ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் எனவும் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

