நேப்பாள விமானத்துடன் மோதவிருந்த ஏர் இந்தியா விமானம்; இருவர் பணியிடைநீக்கம்

1 mins read
cb02c2fe-7753-44f2-b322-095a9828a65c
வானில் ஒரே இடத்தில் ஏர் இந்தியா விமானம் 19,000 அடி உயரத்திலும் நேப்பாள ஏர்லைன்ஸ் விமானம் 15,300 அடி உயரத்திலும் பறந்ததாகக் கூறப்பட்டது. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

ஏர் இந்தியா விமானமும் நேப்பாள ஏர்லைன்ஸ் விமானமும் வானில் கிட்டத்தட்ட மோதவிருந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்விரு விமானங்களும் ஒன்றையொன்று நெருங்கியதை எச்சரிக்கைக் கருவி காட்டியதால் விமானிகள் விழிப்புற்று, விரைந்து செயல்பட்டனர். இதனால் பேரிடர் நிகழ்வது தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை நிகழ்ந்தது.

அந்த நேப்பாள ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரில் இருந்தும் ஏர் இந்தியா விமானம் புதுடெல்லியில் இருந்தும் காத்மாண்டு நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.

வானில் ஒரே இடத்தில் ஏர் இந்தியா விமானம் 19,000 அடி உயரத்திலும் நேப்பாள ஏர்லைன்ஸ் விமானம் 15,300 அடி உயரத்திலும் பறந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இரு விமானங்களும் நெருங்கியதை 'ரேடார்' காட்டியதை அடுத்து, நேப்பாள ஏர்லைன்ஸ் விமானம் 7,000 அடிக்கு இறங்கியது.

இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்ப்பட்டதாகக் கூறி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த இருவரை நேப்பாள விமான ஆணையம் பணியிடைநீக்கம் செய்தது.

மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க மூவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஏர் இந்தியா உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.