மும்பை: ஏர் இந்தியா விமானப் பயணிகளுக்கு 20% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் குறைந்த செலவில் பல்வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஏர் இந்தியா உள்நாட்டு விமானத்தில் ரூ.1,499க்கு பயணச்சீட்டைப் பதிவு செய்யலாம். அதேபோல், ஏர் இந்தியா வெளிநாட்டு விமானத்தில் ரூ.5,033க்கு பயணச்சீட்டைப் பதிவு செய்யலாம்.
இந்தச் சலுகைகளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், பிப்ரவரி 5ஆம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பயணத்தை பிப்ரவரி 11 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
மேலும், பயணத்தேதியை மாற்றும் வசதியும் உள்ளது என்பது பயணிகளுக்குக் கூடுதல் உற்சாகம் அளித்துள்ளது.
சிறப்பு விற்பனைக் காலத்தில் முன்பதிவு செய்யப்படும் அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் ஒருமுறை இலவசமாகத் தேதியை மாற்றிக்கொள்ளலாம். எனினும், விமானம் புறப்படும் 72 மணி நேரத்துக்குள் இந்த மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், இந்தத் தேதி மாற்றம் என்பது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கே பொருந்தும் என்பதும் தேதி மாற்றத்திற்கான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

