அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தோருக்கும் முதற்கட்டமாக, ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே, விபத்து நிகழ்ந்த அன்று, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளை ஈடுகட்டும் வகையில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.
இது ஏற்கெனவே டாடா குழுமம் அறிவித்துள்ள ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையுடன் கூடுதலாக வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த விபத்தில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கு ஏர் இந்தியா நிறுவனம் எப்போதும் உறுதுணையாக நிற்பதாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் கேம்பல் வில்சன் உறுதியளித்தார்.
இழப்பீட்டுடன் காயமடைந்த அனைவரின் மருத்துவச் செலவுகளையும் ஏர் இந்தியா ஏற்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மீட்புப் பணியில் உதவ 200 பராமரிப்பாளர்கள் 40 பொறியாளர்கள் அகமதாபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு பராமரிப்பாளர் என்ற வகையில் அவர்கள் உதவுவார்கள். டிஜிசிஏ உத்தரவின்படி ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து போயிங் 787 ரக விமானங்களும் முன்னெச்சரிக்கை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் இந்நடவடிக்கை உரிய காலக்கெடுவுக்குள் முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
விமான விபத்து நிகழ்ந்த 48 மணி நேரத்தில் கேம்பல் வில்சன் மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.