தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சில மூத்த அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

2 mins read
21694133-5b7e-47e5-a849-cfb4290e15ec
ஏர் இந்தியா விமான விபத்தில் 270க்கும் அதிகமானவர்கள் மாண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

காந்திநகர்: அகமதாபாத் விமான விபத்தின் எதிரொலியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று மூத்த அதிகாரிகளை நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்களை ஊழியர்களுக்கான பணி ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அந்த மூன்று அதிகாரிகளும், தொடர்ந்து விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோட்டத் துணை மேலாளர் சூரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவுத் தலைமை மேலாளர் பிங்கி மிட்டல், திட்டமிடுதல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்

பணி ஒதுக்கீடு செய்தல், விதிமுறைகளைக் கடைப்பிடித்தல், பணியில் பொறுப்புடன் செயல்படுதல் ஆகியவற்றில் கவனமின்றிச் செயல்பட்டதாகவும், விதிகளை மீறியதாகவும் இவர்கள் கண்டறியப்பட்டனர்.

“பணி நேரத்தில் கவனக் குறைவாகச் செயல்பட்ட அந்த மூன்று அதிகாரிகளையும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்க வேண்டும். உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மே 16,17ம் தேதிகளில் பெங்களூரிலிருந்து லண்டனுக்குச் சென்ற, இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் 10 மணி நேரத்தில் சென்று அடைவதற்கு, பதில் கூடுதல் நேரம் ஆகி உள்ளது.

இதுகுறித்து விமான நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான காரணத்தை ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்