ஏர் இந்தியா ‘சிஇஓ’ தேடல்; முன்னிலையில் இருவர்

ஏர் இந்தியா ‘சிஇஓ’ தேடல்; முன்னிலையில் இருவர்

2 mins read
வினோத் கண்ணன், நிபுன் அகர்வால் இருவரும் முன்னிலையில் இருப்பதாகத் தகவல்
ada49585-f4ae-4ed0-ac72-a12135bf6c35
ஏர் இந்தியா விமானம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பொறுப்பை வினோத் கண்ணன், நிபுன் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் ஏற்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவன அதிகாரி வினோத் கண்ணனும் ஏர் இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைவருமான நிபுன் அகர்வாலும் தலைமை நிர்வாக அதிகாரிக்கான தேடலில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. நேரடித் தகவல் அறிந்த இருவர் இந்த விவரங்களை வெளியிட்டனர்.

எஸ்ஐஏ, ஏர் இந்தியாவில் சுமார் 25 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருக்கிறது.

முன்னாள் அதிகாரி பதவி விலகல்

ஏர் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான, நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்பெல் வில்சன் பதவி விலகப்போவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். அந்நிறுவனம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதுடன் விதிமீறல் தொடர்பான நெருக்குதலைச் சந்தித்துவந்த நேரத்தில் அவர் பதவி விலகினார்.

டாடா சன்ஸ் பரிசீலனை

ஏர் இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குதாரர் நிறுவனமான டாடா சன்சின் நிர்வாகக் குழு, திரு கண்ணன், திரு அகர்வால் ஆகிய இருவரில் யாரைத் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இன்னும் சரியான முடிவை எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபராக ஒருவர் இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

எஸ்ஐஏயின் விற்பனை, விளம்பரப் பிரிவின் மூத்த உதவித் தலைவராகத் தற்போது பொறுப்பு வகிக்கும் திரு கண்ணன், முன்னதாக விஸ்தாரா ஏர்லைன்சின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். விஸ்தாராவை, டாடாவும் எஸ்ஐஏயும் இணைந்து நடத்தி வந்தன.

திரு அகர்வால், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியாவில் சேர்ந்தார். டாடா, இந்திய அரசாங்கத்திடமிருந்து ஏர் இந்தியாவை வாங்கிய பிறகு அவர் அதில் இணைந்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசிங்கப்பூர்ஏர் இந்தியாசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்டாடா