அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத் நகரில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 12ஆம் தேதியன்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த அந்த போயிங் 787 விமானம் விழுந்து நொறுங்கியது. குறைந்தது 279 பேர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த உதவியாளரான பிகே மிஷ்ரா அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக சம்பவத்துக்கு மறுநாளான கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விமானத்தின் முதல் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
அகமதாபாத்தின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கிய AI171 விமானத்தில் இருந்தோரில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். தரையில் இருந்தோரில் குறைந்தது 38 பேரும் கொல்லப்பட்டனர்.
விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து வெளியான அனலின் சீற்றத்தால் பயணிகளை அடையாளம் காண்பது மிகவும் சவாலாக இருந்துவருகிறது என்று இந்திய மருத்துவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்தனர். விபத்துக்குப் பலியானோரில் 200க்கும் அதிகமானோரின் உடல்களைப் பெற உறவினர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சவக் கிடங்குக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.
விழுந்து நொறுங்கியபோது அந்த 787-8 டிரீம்லைனர் ரக விமானத்தில் 125,000 லிட்டர் அளவில் எரிபொருள் இருந்தது. அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்துக்குச் செல்ல 10 மணிநேரத்துக்குத் தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்தது.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வெப்பநிலை 1,500 டிகிரி செல்சியசைத் தொட்டதாக மூத்த சுகாதார அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் வந்த குழு ஒன்றிடம் சனிக்கிழமை (ஜூன் 14) தெரிவித்தனர். அவ்வளவு அதிகமான வெப்பநிலை சடலங்களை எரிக்கக்கூடியது.
தொடர்புடைய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி 35 உடல்கள் மட்டுமே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, தங்களிடையே இருக்கும் போயிங் 787 ரக விமானங்களில் 22ஐ ஏர் இந்தியா சோதனையிட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனையிடுவதற்கு 11 போயிங் 787 ரக விமானங்கள் எஞ்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவிடம் மொத்தம் 33 டிரீம்லைனர் விமானங்கள் உள்ளன. முதல் டிரீம்லைனர் விமானத்தை அந்நிறுவனம் 2012ஆம் ஆண்டு வாங்கியது.
அகமதாபாத் விபத்தில் சிக்கிய டிரீம்லைனர் விமானம், சென்ற ஆண்டிலிருந்து செயல்பாட்டில் இருந்தது.