மும்பை: அண்மையில் இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
அது இந்தியாவை மட்டுமில்லாமல் உலக அளவில் விமானப் பயணங்கள் குறித்து கவலையை ஏற்படுத்தியது.
விபத்துமூலம் கிடைக்கும் காப்பீடு தொகை கிட்டத்தட்ட 608 மில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் காப்பீடு மூலம் பெறப்படும் ஆகப் பெரும் தொகைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காப்பீடு குறித்து இந்தியாவின் ‘ஜெனரல் இன்சுரன்ஸ்’ தலைவர் ராமசாமி நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்திலும் ஏர் இந்தியா நிறுவனம் காப்புறுதி வாங்கியுள்ளது.
விமானத்தின் இயந்திரம், பாகங்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 125 மில்லியன் அமெரிக்க டாலர் காப்பீடு உள்ளது என்றார் திரு ராமசாமி.
அதேபோல் விமானப் பயணத்தின்போது மாண்ட பயணிகளுக்கும் மற்றவர்களுக்குமான காப்பீடு தொகை கிட்டத்தட்ட 350 மில்லியன் அமெரிக்க டாலர் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மதிப்பிடப்பட்டுள்ள காப்பீடு தொகை உலக அளவில் விமானங்களுக்கான காப்பீடு தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் இனி இந்தியாவில் விமானங்களுக்கான காப்பீடுகளின் தொகை அதிகமாகலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஏர் இந்தியா விமான விபத்தில் வெளிநாட்டவர்களும் இருந்தனர். இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு தொகை நாடுகளுக்கு ஏற்றவாறு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
காப்பீடு தொகை குறித்து ஏர் இந்தியா பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
காப்பீடு நிறுவனங்கள் பெரும்பாலும் விமானத்திற்கான காப்பீடுகளை வழங்குவார்கள். அதன் பின்னர் பயணிகளுக்கான தொகை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அகமதாபாத்தில் ஜூன் 12ஆம் தேதி நடந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மாண்டனர். ஒருவர் மற்றும் உயிர் தப்பினார்.
விமானம் மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தின் மேல் மோதியது. கட்டடத்தில் இருந்த மாணவர்கள் சிலரும் மாண்டனர்.