பரூச்: அகமதாபாத் நகரச் சாலைகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் விமானத்தைத் தவறவிட்ட பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பத்து நிமிடம் தாமதமானதால் அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானத்தைத் தவறவிட்டார், குஜராத் மாநிலம், பரூச் நகரைச் சேர்ந்த பூமி சௌகான் என்ற இப்பெண்.
பிற்பகல் 1.30 மணியளவில் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவ்விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மாண்டுபோயினர்.
“விமான நிலையத்தைவிட்டு வெளியேறத் தயாரானபோதுதான் நான் செல்லவிருந்த விமானம் விபத்திற்குள்ளானதை அறிந்தேன். என் கால்கள் நடுங்கத் தொடங்கின. சிறிது நேரம் உணர்விழந்ததுபோல் இருந்தேன்,” என்றார் திருவாட்டி பூமி.
தம் கணவருடன் லண்டனில் வசித்து வரும் இவர், ஈராண்டுகளுக்குப் பிறகு விடுமுறையில் இந்திyaa சென்றிருந்தார்.
“விமானம் பிற்பகல் மணி 1.10க்குக் கிளம்பவிருந்தது. 12.10க்குள் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிவிட்டனர். நான் 12.20க்குத்தான் சென்றேன். மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டதாக நான் கெஞ்சியும் விமானத்தில் ஏற என்னை அனுமதிக்கவில்லை,” என்று திருவாட்டி பூமி நினைவுகூர்ந்தார்.
இவர் தன் குழந்தையைத் தம் தாயாரிடம் விட்டுவிட்டுத் தனியாகச் செல்வதாகத்தான் இருந்தார்.
எல்லாம் கடவுள் அருள் என்றார் திருவாட்டி பூமியின் தாயார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய பொது விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.