புதுடெல்லி: வெளிநாட்டுப் பயணிகள் குடிநுழைவுப் பாதுகாப்புச் சோதனையைத் தவிர்க்க உதவிய ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மூவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விதிமீறல் சம்பவம் செப்டம்பர் 4ஆம் தேதி நடந்தது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இதனையடுத்து விமான நிலையப் பாதுகாப்புத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இத்தாலியப் பயணிகள் மூவர், டெல்லி விமான நிலையத்தில் குடிநுழைவுச் சோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல், ஜெர்மனியின் மியூனிக் நகருக்குச் செல்லும் இணைப்பு விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி அமிர்தசரஸ் நகரிலிருந்து டெல்லி சென்றடைந்து, அங்கிருந்து லுஃப்தான்சா விமானத்தில் மியூனிக் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
அமிர்தசரஸ்-டெல்லி, டெல்லி-மியூனிக் ஆகிய இரண்டு வழித்தடங்களும் ஏர் இந்தியாவின் ‘ஹப்-அண்ட்-ஸ்போக்’ (Hub-and-spoke) பயணக் கட்டமைப்பின்கீழ் வரவில்லை. அதனால், அந்தப் பயணிகள் மூவரும் வருகைப் பகுதி வழியாக வெளியேறி, டெல்லி விமான நிலையத்தில் குடிநுழைவுச் சோதனையை முடித்த பின்னரே அடுத்த விமானத்தில் ஏறியிருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் தவறுதலாக அனைத்துலகப் பயண இடைமாற்றப் பகுதிக்கு அனுப்பப்பட்டதால் குடிநுழைவுச் சோதனையைத் தவிர்க்கும் சூழல் ஏற்பட்டது.
பயணிகளை வழிநடத்திச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா ஊழியர்களின் தவறு கண்டறியப்பட்டதையடுத்து, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்பில் விளக்கம் கேட்டு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு இம்மாதம் 14ஆம் தேதி ஏர் இந்தியாவிற்குக் கடிதம் அனுப்பியது. அத்துடன், உள்துறை அமைச்சும் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.
இத்தகைய பாதுகாப்பு விதிமீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த பல அடுக்குச் சோதனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் நாயுடு உறுதியளித்தார்.
