தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - ஏர்ஏஷியா இந்தியா விமானச் சேவைகளுக்கு ஒரே முன்பதிவு

1 mins read
3b5ebe3a-15f4-46eb-87b6-d46410e33bc2
ஒரு நிறுவன விமானத்தில் பயணம் செய்தபின், இன்னொரு நிறுவனத்தின் விமானத்திற்கு மாறுவோர்க்கு ஒரே நுழைவுச்சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர்ஏஷியா இந்தியா விமானங்களில் அடுத்தடுத்துப் பயணம் செய்யவிருப்போர், அதற்காக இனி தனித்தனிப் பயணச்சீட்டிற்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.

ஒரே பயணி பெயர் பதிவுடன் (பிஎன்ஆர்) அவர்கள் பயணம் செய்யலாம்.

இரு நிறுவனங்களும் திங்கட்கிழமையன்று வெளியிட்ட கூட்டறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.

‘ஏஐஎக்ஸ் கனெக்ட்’ எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ள ஏர்ஏஷியா இந்தியா உள்நாட்டுச் சேவைகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனைத்துலகச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.

உள்நாட்டில் ஏர்ஏஷியா இந்தியா விமானத்திலும், அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வழியாக வெளிநாடு செல்லும் பயணிக்கு ஒரே நுழைவுச்சீட்டு (போர்டிங் பாஸ்) வழங்கப்படும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

“ஆயினும், இணைப்பு விமானத்தில் ஏறும் விமான நிலையத்தின் சுங்க, குடிநுழைவு நடைமுறைகளுக்குப் பயணிகள் உட்பட்டாக வேண்டும். பயணப்பை கடைசியாக இறங்குமிடத்தில் ஒப்படைக்கப்படும்,” என்று அவ்வறிக்கை கூறியது.

முன்னதாக, இவ்வாண்டுத் தொடக்கத்தில் இவ்விரு நிறுவனங்களும் ஒரு கூட்டு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தின. இரு நிறுவனங்களின் விமானச் சேவைகளுக்கும் அந்த இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனம், ஏர் இந்தியா எக்ஸ்பிரசுடன் விரைவில் ஒன்றிணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்