புதுடெல்லி: பயணியைத் தாக்கிக் காயப்படுத்தியதாகச் சொல்லப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானியைக் கைதுசெய்துவிட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்தது.
டெல்லி விமான நிலையத்தில் டிசம்பர் 19ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது என்றும் அச்சமயத்தில் கேப்டன் வீரேந்தர் செஜ்வால் என்ற அந்த விமானி பணியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அங்கித் திவான் என்ற ஆடவர், காயமுற்ற முகத்துடன் கூடிய தமது படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
தம்முடைய ஏழு வயது மகள் முன்பாக செஜ்வால் தம்மைத் தாக்கினார் எனக் கூறிய திவான், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் தம் மகள் விடுபடவில்லை என்றும் சொன்னார்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று செஜ்வாலிடம் காவல்துறை விசாரித்தது. விமான நிலையத்திடமிருந்தும் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்தும் போதிய சான்றுகளைத் திரட்டிய பிறகு, அவரைக் கைதுசெய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
நான்கு மாதக் கைக்குழந்தையை வைத்திருந்ததால் ஊழியர்கள் பயன்படுத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாங்கள் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக திவான் கூறினார். அப்போது, ஊழியர்கள் வரிசையின் இடையில் புகுந்ததாகவும் அவர் சொன்னார்.
அப்படி இடையில் புகுந்தவர்களில் செஜ்வாலும் ஒருவர் என்றும் தாம் படிக்காதவரா, அது ஊழியர்களுக்கான பகுதி என்பது தெரியவில்லையா என்று கூறி, அவர் தம்மைக் கடிந்துகொண்டார் என்றும் திவான் விளக்கினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, செஜ்வாலும் திவானும் ஒருவர்மீது ஒருவர் காவல்துறையில் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து, செஜ்வாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியிடைநீக்கம் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
தம்மை இழிவாகப் பேசி திவானே சண்டையைத் தொடங்கியதாகத் தமது மனுவில் குறிப்பிட்டுள்ள செஜ்வால், சண்டையில் தனக்கும் காயமேற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
செஜ்வால்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

