தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா

2 mins read
1cd36165-a93d-439d-9a87-fc41362a0899
செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் நூற்றுக்கணக்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பில் இருப்பதால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

புதுடெல்லி: விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு உதவும் வகையில், அதனுடைய 20 வழித்தடங்களில் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என்று வியாழக்கிழமையன்று (மே 9) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த எதிர்பாராச் சூழலால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எடுத்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) 292 விமானங்களை இயக்குகிறோம். எங்களது 20 வழித்தடங்களில் ஏர் இந்தியா விமானங்களை இயக்கி, ஆதரவளிக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 300க்கும் அதிகமான விமானப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர்.

ஏர்ஏஷியா இந்தியா நிறுவனத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரசுடன் இணைத்தபோது வேலைப் பாதுகாப்பு, சம்பளம், பணி மூப்பு, நிபுணத்துவம் போன்றவை தொடர்பில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன என்றும் ஆனால் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் குறைகூறுகின்றனர்.

மலிவுக்கட்டண விமான சேவை நிறுவனமான ஏஐஎக்ஸ் கனெக்ட் (முன்னர் ஏர் ஏஷியா இந்தியா) டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரசுடன் இணைக்க கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியது.

ஊழியர் பற்றாக்குறையால் புதன்கிழமையன்று 90க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தான நிலையில், வியாழக்கிழமை 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மருத்துவ விடுப்பு எடுத்த ஊழியர்களில் குறைந்தது 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணிநீக்கம் செய்துவிட்டது. மருத்துவ விடுப்பிலுள்ள மற்ற ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்