ஜெர்மனியில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெர்மனியில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப் படம்: என்டிடிவி

14 Oct 2026 - 7:12 pm

1 mins read

பெர்லின்: ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு திடீரென கடத்தல், வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. பின்னர் அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘போயிங் 787 டிரீம்லைனர்’ (AI-2030) ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், டெல்லியை அடைவதற்கு முன்னதாகவே பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் திசைதிருப்பப்பட்டது.

புதன்கிழமை காலை 9:45 மணியளவில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் தரையிறங்கியவுடன் உடனடியாக விமான நிலைய பாதுகாப்புப் படையினரும் மத்தியப் பாதுகாப்பு முகமைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் விமானத்தைச் சூழ்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானக் கடத்தல் போன்ற அசம்பாவிதங்களை எதிர்கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள உச்சகட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமல்படுத்தப்பட்டன.

பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின், அவர்கள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். சோதனையின் முடிவில் அம்மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் அல்லது கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெறும் வசதிகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஏர் இந்தியாவிமானம்கடத்தல்வெடிகுண்டு மிரட்டல்டெல்லிஜெய்ப்பூர்