தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமானம் ‘கடத்தல்’; மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை

2 mins read
கூடுதல் விழிப்புநிலையில் இந்திய விமானப் படை
4355d970-c826-425c-82d5-d077c5b6e0f7
ஜனவரி 27 திங்கட்கிழமை இரவு ஏர் இந்தியா விமானம் ஒன்று புதுடெல்லியிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய சற்று நேரத்திலேயே அது கடத்தப்பட்டதாக சமிக்ஞை கிட்டியது. - படம்: பிடிஐ

மும்பை: ஏர் இந்தியா விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலால் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 27) இரவு புதுடெல்லியிலிருந்து ஏஐ2957 விமானம் மும்பைக்குப் புறப்பட்டது.

இந்நிலையில், விமானம் கிளம்பிய சற்று நேரத்திலேயே அது கடத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டகத்திற்கு வந்தது.

இதனையடுத்து, இந்திய விமானப் படை, டெல்லி காவல்துறை, மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை, பொது விமானப் போக்குவரத்துச் செயலகம் உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு, இந்திய விமானப் படையும் கூடுதல் விழிப்புநிலையில் வைக்கப்பட்டது.

ஆனால், விமானம் கடத்தப்பட்டதாக வந்தது தவறான எச்சரிக்கை சமிக்ஞை என்றும் விமானம் வழக்கம்போல் இயங்குகிறது என்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டகத்திற்கு அவ்விமானத்தின் விமானி தகவல் தெரிவித்தார்.

ஆனாலும், விமானி நெருக்கடியான நிலையில் இருந்து, தவறான சமிக்ஞை எனக் கூறும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றெண்ணி, மெத்தனமாக இருந்துவிடாமல் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

இரவு 9.47 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கியது. அதற்குமுன் அவ்விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு, காவல்துறையினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தரையங்கியதும் விமானம் தனியிடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, முழுமையாகச் சோதனையிடப்பட்டது. அபாயம் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகே, அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற அனுமதிக்கப்பட்டதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகச் செய்தி தெரிவித்தது.

அவ்விமானத்தில் 126 பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

விமானத்திலிருந்து தவறான சமிக்ஞை கிடைக்க என்ன காரணம் குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆயினும், விசாரணை முடிந்த பின்னரே தெளிவான காரணம் தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்