டெல்லியில் இருந்து லண்டன் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் இரண்டு சிப்பந்திகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதனால், விமானத்தை விமானி மீண்டும் டெல்லியில் தரையிறக்கியதாகவும் பயணி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்தது.
பயணிமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் பயணி பிரச்சினை செய்ததாகவும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தால் விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்கியதாகவும் ஏர் இந்தியா குறிப்பிட்டது.
பயணி உடல்ரீதியாக சிப்பந்திகளைத் தாக்கியதால் அவர்மீது எழுத்துப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்காமல் நேரடியாக வழக்குப்பதிவு செய்ததாக ஏர் இந்தியா கூறியது.
திங்கட்கிழமை (ஏப்ரல் 10) காலை 6:35 மணிக்கு விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் பிரச்சினைகள் எழ, காலை 9:42 மணிக்கு விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது.
விமானத்தில் நடந்த தொந்தரவிற்கு வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா, பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் கூறியது.
விமானம் மதிய நேரத்தில் மீண்டும் லண்டன் நோக்கி புறப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியது.