புதுடெல்லி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலை, மோதல்கள் காரணமாக சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவைகளை அக்டோபர் 24ஆம் தேதிவரை ரத்துசெய்வதாக ஏர் இந்தியாவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசும் அறிவித்துள்ளன.
அதன்படி, ஜெட்டா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்கான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தற்காலிகமாக இயக்கப்படாது.
முன்னதாக, சவூதிக்கான விமானச் சேவைகளை அவ்விரு நிறுவனங்களும் அக்டோபர் 17ஆம் தேதி சனிக்கிழமைவரை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தன. அதன்பின் அந்தச் சேவைத் தடையை அக்டோபர் 20 வரை ஏர் இந்தியா நீட்டித்திருந்தது.
இண்டிகோ, ஆகாசா ஏர் விமான நிறுவனங்களும் அந்நாட்டிற்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
அண்மையில் ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏமனின் ஹூதி போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதில் பலர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதனையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.
