புதுடெல்லி: ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரெனக் குலுங்கிய சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தது குறித்து நடந்துவரும் விசாரணையில் ‘ஏர்பஸ்’ நிறுவனம் இணைந்துள்ளது.
விசாரணை நடத்தும் புலனாய்வாளர்களுக்கு உதவுவதற்காக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) புதுடெல்லிக்கு தனது வல்லுநர் குழுவை அனுப்பியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
கடந்த 4ஆம் தேதி தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரெனக் குலுங்கியது. இதனால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் சிலரும் விமானப் பணியாளரும் காயமடைந்தனர்.
ஓரிரு நொடிகளில் ஏறக்குறைய 91 மீட்டர் கீழே இறங்கியதால் விமானம் குலுங்கியதாகக் கருதப்படுகிறது. எனினும், குறித்த நேரத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
அதன் பின்னர் விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்துப் பரிசோதனையின்போது தலைமை விமானி போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியவந்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இத்தகவல் கிடைத்ததாக என்டிடிவி தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு சோதனை முடிவு வெளிவந்த பிறகே எதையும் உறுதிசெய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விமானம் திடீரென உயரத்தை இழந்தது என்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் நிலையில், விமானத்தைத் தயாரித்த நிறுவனத்திற்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, இந்தச் சம்பவம் ஒரு தீவிரமான நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டு, விமான விபத்து விசாரணைப் பணியகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று இந்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் இந்திய விசாரணை அதிகாரிகளுக்குத் தங்கள் நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்கி வருவதாக ஏர்பஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியாவுக்குத் தங்கள் நிறுவனம் தகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்றும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அவை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


