ஏர் இந்தியா எரிபொருள் கட்டணம் குறைப்பு: பயணச்சீட்டு விலை சரிகிறது

ஏர் இந்தியா எரிபொருள் கட்டணம் குறைப்பு: பயணச்சீட்டு விலை சரிகிறது

கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

03 Jul 2026 - 9:53 pm

2 mins read

புதுடெல்லி: அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை குறைந்ததைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது எரிபொருள் கூடுதல் கட்டணத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

புதன்கிழமை (ஜூலை 1) முதல் அந்தக் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா குறைத்துள்ளது. அந்தக் கட்டணக் குறைப்பு காரணமாக அனைத்துலக விமானப் பயணச் சீட்டுகளின் விலை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணக் குறைப்புச் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, பிற விமான நிறுவனங்களும் விரைவில் இதனைப் பின்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை ஜூன் 30 ஆம் தேதி ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் கீழ் குறைந்தது. பிப்ரவரி 28ஆம் தேதி மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதிலிருந்து அதுவே ஆகக் குறைந்த விலை.

அதேபோல, உள்நாட்டு விமான எரிபொருளின் விலையும் ஜூலை 1ஆம் தேதி கிலோ லிட்டருக்கு ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.1.10 லட்சமாகக் குறைக்கப்பட்டது.

விலைகள் இவ்வாறு சரிந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பா வழித்தடங்களுக்கான அனைத்துலக எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 38 விழுக்காடும் ஆஸ்திரேலியா மற்றும் வடஅமெரிக்க வழித்தடங்களுக்கான கட்டணத்தை 28.5 விழுக்காடும் குறைப்பதாக ஏர் இந்தியா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து நான்கு மாதங்களாக பெரும்பாலான அனைத்துலக வழித்தடங்களில் விமானப் பயணக் கட்டணம் அதிகரித்தது.

இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பா சென்ற ஏர் இந்தியா விமானங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணம் US$205 உயரும் என ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. தற்போது அந்தக் கட்டணம் US$125 ஆகக் குறைந்துள்ளதால் விமானப் பயணிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

அதேபோல பிற வழித்தடங்களுக்கான கட்டணமும் சற்று குறையக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
ஏர் இந்தியாஎரிபொருள்கட்டணம்