இவ்வாண்டு 5,100 பேரைப் பணியமர்த்தும் ஏர் இந்தியா

1 mins read
3c336f81-fbf8-4f92-9088-b9152cf760dc
படம்: இபிஏ -

ஏர் இந்தியா நிறுவனம் இவ்வாண்டு 5,100 விமானப் பணியாளர்களைப் பணியமர்த்த உள்ளது. அவர்களில் 4,200 விமானச் சிப்பந்திகளும் 900 விமானிகளும் அடங்குவர்.

அந்நிறுவனம் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள வேளையில், விமானங்களை இயக்குவதற்கு ஆளெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 1,900க்கும் அதிகமான விமானச் சிப்பந்திகளையும் 285 விமானிகளையும் ஏர் இந்தியா பணியமர்த்தி உள்ளது.

இந்தியா முழுவதுமிருந்து பணியமர்த்தப்படவுள்ள விமானப் பணியாளர்கள், 15 வார பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவர்.

ஏர் இந்தியாவில் பணியமர்த்தப்பட்டுள்ள 1,900க்கும் மேற்பட்டோரில் 1,100 பேருக்கு கடந்த ஏழு மாதங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 500 விமானப் பணியாளர்கள் ஏர் இந்தியாவில் பணியைத் தொடங்கிவிட்டனர்.

ஏர் இந்தியாவின் விமானச் சேவைப் பிரிவுத் தலைவர் சந்தீப் வர்மா, "கூடுதலான விமானங்களை வாங்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ள வேளையில், விமானிகளையும் விமானப் பழுதுபார்ப்புப் பொறியாளர்களையும் பணியமர்த்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்," என்றார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.