புதுடெல்லி: மேற்கு, வடஇந்தியாவைச் சேர்ந்த பல நகரங்களுக்குச் செவ்வாய்க்கிழமை (மே 13) இயக்கப்படவிருந்த விமான சேவைகளை ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் ரத்துசெய்தன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் ஏற்பட்ட பதற்றநிலையை ஒட்டி விதிக்கப்பட்டுள்ள வான்வெளிக் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்புமே அதற்குக் காரணம்.
ஜம்கு, லே, ஜோத்பூர், புஜ், ஜாம்நகர், சண்டிகர், அமிர்தசரஸ், ராஜ்கோட் ஆகிய எட்டு நகரங்களுக்கான இருவழி விமான சேவைகள் ரத்துசெய்யப்படுவதாக தனது எக்ஸ் பக்கம் வழியாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
நிலைமையைக் கண்காணித்து, அண்மைய தகவல்களை அவ்வப்போது வெளியிடுவோம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ராஜ்கோட், அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய ஆறு நகரங்களுக்குமான இருவழி விமான சேவைகளை இண்டிகோ நிறுவனமும் ரத்துசெய்துள்ளது.
விமான நிலையத்திற்குக் கிளம்புமுன் தங்கள் விமானங்களின் நிலவரம் குறித்த அண்மைய தகவல்களை இணையத்தளம் அல்லது செயலி வழியாக அறிந்துகொள்ளுமாறும் பயணிகளுக்கு இண்டிகோ அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அடுத்து, பயணிகள் போக்குவரத்திற்குத் தற்காலிகமாக மூடப்பட்ட 32 இந்திய விமான நிலையங்கள் திங்கட்கிழமையன்று மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.