தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 விதிமீறல்களில் ஈடுபட்ட ஏர் இந்தியா: தணிக்கையில் அதிர்ச்சி தகவல்

2 mins read
21d633a4-0b8f-40f2-9708-c8e6d6dc32a9
நடப்பாண்டு ஜூன் மாதம் அகமதாபாத் விமானத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்நிறுவனத்தின் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட முறை அந்நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏவைச் (DGCA) சேர்ந்த பத்து ஆய்வாளர்கள், நான்கு கூடுதல் தணிக்கையாளர்களைக் கொண்டு தணிக்கை நடத்தப்பட்டது. அச்சமயம், பல செயல்பாட்டு கண்டறியப்பட்டன.

நடப்பாண்டு ஜூன் மாதம் அகமதாபாத் விமானத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்நிறுவனத்தின் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை 1 முதல் 4ஆம் தேதி வரை, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது, ஏழுக்கும் மேற்பட்ட முதல் நிலை பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்ற விதிமீறல்கள் தொடர்பான குறைபாடுகள் உடனடியாக திருத்த நடவடிக்கைகள் தேவைப்படுபவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க ஏர் இந்தியாவுக்கு ஜூலை 30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவித்தது.

“உலகின் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தணிக்கை நடத்தப்பட்டது,” என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விமானப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, போயிங் 787, 777 ரக விமானங்கள் இடையே தொடர்ச்சியான பயிற்சி இடைவெளிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகவை தெரிவித்தது.

ஏர் இந்தியா தணிக்கை தொடர்பான 11 பக்க ரகசிய தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தச் செய்தியை அது வெளியிட்டது.

விமானிகளின் பேச்சுக்கான தகுதித் தரங்களை பூர்த்தி செய்யாத ‘சிமுலேட்டர்’களை ஏர் இந்தியா பயன்படுத்தியது என்றும் புகார் வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்