புதுடெல்லி: பாகிஸ்தான் தனது வான்பகுதியில் ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய விமானங்கள் செல்ல தடை விதித்துள்ளது.
இதனால் ஏர் இந்தியா அதன் பயணப்பாதையை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தடை கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்தால் ஏர் இந்தியாவுக்குக் கூடுதலாக 600 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகலாம்.
இந்த இழப்பை ஈடுகட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம் மத்திய அமைச்சிடம் நிதி கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணப்பாதை மாற்றம் காரணமாக விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும். மேலும், எரிபொருள் செலவும் அதிகமாகும்.
இந்திய அரசாங்கத்திடம் மானியம் கேட்டு ஏர் இந்தியா பேசியுள்ளதாகவும் நிலைமையை அறிந்து அதனால் ஏற்படும் நிதி இழப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் காஷ்மீர் பகுதியில் சுற்றுப்பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வகிக்கிறது. தற்போது ஏர் இந்தியா அதன் நிர்வாகத்தையும் கட்டமைப்பையும் பெரிய அளவில் மாற்றிவருகிறது.
இச்சூழலில் இந்தப் பிரச்சினை தலைதூக்கி இருப்பது ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2023-2024 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 520 மில்லியன் டாலர் நட்டம் ஏற்பட்டது. இருப்பினும் அது 4.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.
இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்க நாடுகளுக்குப் பாகிஸ்தான் வான்வழியாகச் செல்வது வழக்கம்.