ஏர் இந்தியா விமானம் 30 மணி நேரம் தாமதம்

ஏர் இந்தியா விமானம் 30 மணி நேரம் தாமதம்

1 mins read
200க்கு மேற்பட்டோருக்கு 350 அமெரிக்க டாலர் மதிப்பிலான பற்றுச்சீட்டுகள்
929cbc3d-fb1e-4908-8182-4460e7646de4
பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கோரினார். - படம்: எக்ஸ் தளம்

புதுடெல்லி: டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 30 மணி நேரம் தாமதமடைந்ததால் பயணிகள் சிரமப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப, செயலாக்க இடையூறுகள் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (மே 30) பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் புறப்படும் நேரம் பலமுறை மாற்றியமைக்கப்பட்ட பிறகு, வெள்ளிக்கிழமை (மே 31) இரவு 9.55 மணியளவில் கிளம்பியது. 16 மணி நேரம் கழித்து இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தது.

பயணிகளில் வயதானோரும் சிறு குழந்தைகளும் அடங்குவர்.

விமானத்தின் குளிரூட்டும் சாதனங்கள் பழுதாகியிருந்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நிறுவனம், அவர்களுக்குத் தலா ரூ. 29,000 (ஏறக்குறைய 470 வெள்ளி) மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை வழங்கியது. 200க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்