புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்த பத்து நாள்கள் கடந்த நிலையிலும் மாண்டோரை அடையாளம் காணும் பணிகள் தொடருகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஜூன் 12ஆம் தேதி லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பறக்கத் தொடங்கிய ஒருசில வினாடிகளிலேயே கீழே விழுந்து எரிந்ததில் விமானத்தில் இருந்த 241 பேரும் தரையில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர்.
அந்த மோசமான விபத்தில் பலியான 270 பேரின் உடல்களும் முற்றாகக் கருகிவிட்டன. அவர்களை அடையாளம் காண்பது சவாலான பணியாக நீடிக்கிறது.
உறவினர்களின் மரபணுக்களைப் பொருத்தி ஒவ்வொரு சடலமும் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வரை 231 சடலங்களின் மரபணுப் பொருத்தம் உறுதியானது. அவற்றில் 210 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
குஜராத் திரைப்பட பிரமுகர் மகேஷ் ஜிராவாலாவின் சடலமும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரபணுக்களைப் பொருத்திப் பார்ப்பது கடினமான பணி என்றும் ஓர் உறவினரின் மரபணு பொருந்தவில்லை எனில் இன்னோர் உறவினரிடம் மரபணுச் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில், மாண்டோரில் எட்டுப் பேரின் உறவினர்களிடம் மீண்டும் மரபணு சோதனை நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
மாண்டவர் இன்னாரென்று உறுதியாக அடையாளம் காணப்படவில்லை எனில் யாரிடமும் சடலம் ஒப்படைக்கப்படாது என்று அகமதாபாத் அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.
“வழக்கமாக, மாண்டவரின் தந்தை, மகன், மகள் ஆகியோரின் மரபணுக்களே சோதிக்கப்படும். அவை பொருந்தாவிடில் நெருங்கிய உறவினர்களின் மரபணு மாதிரி எடுத்து பரிசோதிக்கப்படும்,” என்றார் அவர்.