அகமதாபாத்: இவ்வாண்டு ஜூன் 12ஆம் தேதி நேர்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் மாண்டோரில் நால்வரின் குடும்பத்தினர் போயிங், ஹனிவெல் நிறுவனங்கள்மீது அமெரிக்காவின் டெலவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பழுதான எரிபொருள் விசைகளால்தான் AI171 விமானம் விபத்திற்குள்ளானது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரிலிருந்து லண்டன் நகருக்குக் கிளம்பிய ஏர் இந்தியா போயிங் 787 விமானம், சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அவ்விபத்தில் விமானப் பயணிகள் 229 பேர், விமான ஊழியர்கள் 12 பேர், தரையிலிருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் கொல்லப்பட்டனர்; விமானத்திலிருந்த ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார்.
இந்நிலையில், காந்தாபென் திருபாய் பகாதல், நாவ்யா சிராக் பகாதல், குபேர்பாய் பட்டேல், பாபிபென் பட்டேல் ஆகிய நான்கு பயணிகளின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் துண்டிப்பு விசையில் உள்ள கட்டுப்பாட்டு இயங்குமுறையானது தானாக இயங்க முடியாதபடி உறுதிசெய்வதைச் சோதிக்கத் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கறுப்புப் பெட்டியில் பதிவான இரு விமானிகளின் உரையாடலானது, விமான இயந்திரங்களுக்கான எரிபொருள் ஓட்டத்தைக் விமானி குறைத்ததாகக் காட்டுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
முன்னதாக, விமான விபத்து தொடர்பான இந்தியப் புலனாய்வாளர்களின் முதற்கட்ட அறிக்கையானது, போயிங் மற்றும் இயந்திரத் தயாரிப்பாளரான ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனங்களை விபத்திலிருந்து விடுவிப்பதுபோல் தோன்றியது. ஆனால், விமானிகளின் நடவடிக்கைகள் மீதே விசாரணை அதிகாரிகளும் ஊடகங்களும் மிகுந்த கவனம் செலுத்தியதாக உயிரிழந்த சிலரின் குடும்பத்தினர் குறைகூறினர்.
இதனிடையே, இவ்வழக்குத் தொடர்பில் போயிங் நிறுவனம் கருத்துரைக்க மறுத்துவிட்டது என்றும் ஹனிவெல் நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.