தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விமான விபத்தில் 200க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

4 mins read
62a8bee5-8c72-4314-8e75-988aac1e519b
அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை (CISF) மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. - படங்கள்: மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை
multi-img1 of 3

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விழுந்து நொறுங்கியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூர் நேரப்படி இரவு 9 மணியளவில் 204 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுவதாக அகமதாபாத் காவல்துறை தெரிவித்திருந்தது. பின்னர் இரவு 9.38 மணியளவில் (சிங்கப்பூர் நேரம்) இருக்கை எண் 11Aயில் இருந்த ஒருவர் உயிருடன் இருப்பதைக் காவல்துறை கண்டுபிடித்ததாகவும் அந்தப் பயணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அகமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் தெரிவித்ததாக ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட அந்த ‘போயிங் 787-8 ட்ரீம்லைனர்’ வகை விமானத்தில் பயணிகள் 232 பேரும் சிப்பந்திகள் 10 பேரும் பயணம் செய்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. பயணிகளில் சிறார் 11 பேரும் இரு பச்சிளங்குழந்தைகளும் அடங்குவர் என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் (இந்திய நேரம்) புறப்பட்ட அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் அது விழுந்ததாகவும் அக்கல்லூரி மாணவர்கள் ஐவர் அச்சம்பவத்தில் மாண்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தைத் தொடர்ந்து விமான நிலையத்துக்கு அருகே கரும்புகை விண்ணில் எழுவதைச் சம்பவ இடத்தைக் காட்டும் படங்களில் காணமுடிகிறது.

இந்தியத் தொலைக்காட்சி ஒளிவழிகளில் வெளியான படங்களில் தூக்குப் படுக்கைகள் மூலம் சிலர் தூக்கிச் செல்லப்படுவதையும் பின்னர் மருத்துவ உதவி வாகனங்களில் ஏற்றிச்செல்லப்படுவதையும் காண முடிகிறது. உயிரிழந்தவர்களில் அருகில் இருந்த தங்குவிடுதியில் தங்கியிருந்த மூன்று மருத்துவ மாணவர்களும் அடங்குவவர் என்று இந்திய மருத்துவ சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியத் தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத் விமான விபத்து மனமுடைந்து போகுமளவு வருத்தமளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மீட்புப் பணிகளுக்குத் தேவைப்படும் அனைத்து ஆதரவும் வழங்கப்படுவதை உறுதிசெய்யும்படி அவர் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய அதிபர் திரௌபதி முர்மு உட்பட, இந்திய அமைச்சர்கள் பலரும் இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து தொடர்பாக குஜராத் முதல்வர் உட்பட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நிலைமைப் பார்வையிட்டார்.

“அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது. தனிப்பட்ட முறையில் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறேன். அவசரகாலங்களில் செயல்பட வேண்டிய அனைத்து நிறுவனங்களையும் விரைந்து, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

மீட்புக் குழுக்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் மருத்துவ உதவி, நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானியாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்றும் விமானம் விபத்துக்குள்ளாவதற்குச் சிறிது நேரம் முன்னதாகத் துணை விமானி கிளைவ் குந்தரிடமிருந்து (1,100 மணி நேரப் பணி அனுபவம் கொண்டவர்) உதவி கேட்டு அழைப்பு வந்ததாகவும் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Watch on YouTube

இதற்கிடையே குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் பயணிகள் பட்டியலில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய நிலைமை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கனடியர், எழுவர் போர்ச்சுகலைச் சேர்ந்தவர்கள் என்று ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், விசாரணைக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் விமானத்தின் பின்பகுதியைக் காட்டும் படம்.
அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் விமானத்தின் பின்பகுதியைக் காட்டும் படம். - படம்: மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை/எக்ஸ் தளம்
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் புகை எழும் வேளையில் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் புகை எழும் வேளையில் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

உலகத் தலைவர்கள் இரங்கல்

உலகத் தலைவர்கள் பலரும் அகமதாபாத் விமான விபத்து குறித்து வருத்தமும் இரங்கலும் தெரிவித்துவருகின்றனர்.

ஏர் இந்தியா விமான விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மனமுடைந்துபோனதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனும் விமானத்தில் பயணம் செய்த இதர நாடுகளைச் சேர்ந்த பயணிகளுடனும் சிங்கப்பூர் ஒன்றுபட்டு நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரிட்டிஷ் குடிமக்கள் பலரும் பயணம் செய்த அந்த விமானம் விபத்துக்குள்ளானதைக் காட்டும் படங்கள் மிகுந்த துயரமளிப்பதாகக் கூறியுள்ளார். தகவல்கள் உடனுக்குடன் தமக்குத் தெரிவிக்கப்படுவதாகத் தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனின் மன்னர் சார்ல்ஸ், தாமும் அரசியாரும் இந்த விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியுற்றதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய அரசாங்கத்தின் சார்பாகவும் மலேசிய மக்கள் சார்பாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயென், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் போன்றோரும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்