புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவான தரவுகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜூன் 25ஆம் தேதி அந்தத் தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டது. தற்போது கறுப்புப் பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. கறுப்புப் பெட்டியில் இரண்டு முக்கியப் பகுதிகளில் இருந்து தரவுகள் மீட்கப்பட்டு அவற்றை பகுப்பாய்வு செய்யும் பணி நடக்கிறது,” என்று விமானப் போக்குவரத்து அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பெட்டி ஆய்வுக்குப் பின்னர், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன என்றும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.
முன்னதாக, விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி இந்திய விமான விபத்து விசாரணை முகவையால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், கறுப்புப் பெட்டி மோசமாகச் சேதமடைந்துவிட்டதால், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் எனத் தகவல் வெளியானது.
எனினும், இரு நாள்களுக்கு முன்பு இந்தியாவிலேயே கறுப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.